யூரோ நெருக்கடி
ஒரே-செலாவணியின் (single currency) முறிவு, அதாவது யூரோவின் முறிவு ஐரோப்பிய மற்றும் உலக பொருளாதாரத்தில் நாசகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்ற எச்சரிக்கைகள் உயர்மட்ட ஐரோப்பிய வட்டாரங்களிலிருந்து வந்தவண்ணம் உள்ளன. சான்றாக, சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸின் கட்டுரையாளர் மார்டின் வோல்ஃப், புருசெல்ஸை மையமாக கொண்ட புரூகெல் சிந்தனைக்கூடத்தின் தலைவர் ஜீன் பிசானி-பெர்ரி மற்றும் போலாந்தின் வெளியுறவுத்துறை மந்திரி ரடாஸ்லோ சிகோர்ஸ்கியும் எச்சரித்திருந்தனர்; பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பும் (OECD) எச்சரித்திருந்தது; சுவிஸ் வங்கியியல் நிறுவனமான UBSஇன் கணிப்பாளர்களும் இதையே அனுமானித்திருந்தனர்.
இதற்கிடையில், புருசெல்ஸில் நடந்த யூரோ மண்டல நிதிமந்திரிகள் கூட்டம் ஆழமடைந்துவரும் யூரோ நெருக்கடிக்கு எவ்வித தீர்வுமின்றி மீண்டும் தோல்வியுற்றுள்ளது. இக்கூட்டத்தில், அப்பிராந்திய நிதிமந்திரிமார்கள் EFSFஇன் நிதியை 1 ட்ரில்லியன் யூரோவாக உயர்த்த வேண்டுமென கேட்டுக்கொண்டனர். ஆனால் நிதி-வரவு குறைந்துவிட்டிருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் கூர்மையான முரண்பாடுகளைக் கண்டுவருவதாகவும் EFSF தலைவர் குறிப்பிடுகிறார்.
கிரீஸ், அயர்லாந்து மற்றும் போர்ச்சுக்கல் என விளிம்புகளில் தொடங்கிய நெருக்கடி, தற்போது யூரோ மண்டலத்தின் இதயபகுதிக்கு வந்துள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கியை கடைசி புகலிடமாக அனுமதிக்கவோ அல்லது ஒவ்வொரு நாட்டின் கடன்களுக்கும் உத்தரவாதமளிக்கும் ஒரு வழியை உருவாக்கவோ ஜேர்மனி அதிபர் ஆங்கெலா சார்சிலரும், அவரது அரசாங்கமும் மறுத்துவருவதே யூரோ நெருக்கடிக்கு காரணமென்று பெரும்பாலான ஊடக விமர்சனங்களில் விவரிக்கப்படுகின்றன.
ஆனால் இந்த நெருக்கடியை ஜேர்மனியின் இணங்காமையோடு மட்டுமே நிறுத்திவிட முடியாது. முன்வைக்கப்பட்ட முறைமைகளை ஜேர்மனி ஏன் எதிர்க்கிறது? அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், அதிகபட்சமாக குறுகிய-கால மீட்சியை மட்டுமே அளிக்கக்கூடும், அதேவேளை நீண்டகால அடிப்படையில் ஜேர்மனியை பெரும் சுழலுக்குள் இழுத்துவிடும் என்ற அச்சத்தின் அடித்தளத்தில் ஜேர்மனி அந்த முறைமைகளை எதிர்க்கிறது.
யூரோ மண்டல பொருளாதாரத்தின் இயக்கவியலைக் குறித்த ஒரு சுருக்கமான ஆய்வும் கூட, அந்த நெருக்கடியின் வேர்கள் ஜேர்மனியின் இணங்காமையில் கிடையாது, அதையும்விட மிகவும் ஆழமாக உள்ளதென்பதைத் தெளிவுபடுத்தும். கடன் நெருக்கடியானது, ஐரோப்பா முழுவதிலும் நிலவும் பொருளாதார வளர்ச்சியின்மையால் தூண்டிவிடப்பட்டுள்ளது.
கடன் வாங்கும் செலவுகளை (borrowing cost) குறைக்கும் முறைமைகளை இத்தாலி பின்பற்றுகிறது. இதையே ரஷ்யாவும், பிரேசிலும்கூட பின்பற்றுவதாக bloomberg குறிப்பிட்டிருந்தது. கடன் வாங்கும் செலவுகளைக் குறைக்க வேண்டுமானால், சிக்கன முறைமைகளை நடைமுறைப்படுத்தாமல் முடியாது. சிக்கன முறைமைகள் பொருளாதாரத்தை ஆழமாக பின்னடைவுக்கு இட்டுச் செல்கிறது; அதன்விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கிறது; இதனால் கடன் வாங்கும் செலவுகளை அதிகரிக்க வேண்டியதாகிறது. இவ்விதத்தில் சிக்கன முறைமைகள் அதிகரிப்பு-பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியின் வீழ்ச்சி-மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு-மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலைமை என முதலாளித்துவ நிதியியல் அமைப்புமுறை சுயமாக ஒரு சுழற்சியில் வந்துவிட்டிருக்கிறது.
கடன் மற்றும் யூரோ நெருக்கடியென்பது, அரசாங்கங்கள் ஏதோ வெகுசில “சரியான” கொள்கைகளை நடைமுறைப்படுத்தி சுமூகமாக தீர்த்துவிடக்கூடிய ஒரு பிரச்சினையல்ல என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். இது முதலாளித்துவ திரட்சியின் முறிவால் ஏற்பட்டிருக்கும் வடிவமாகும்.
அரச கடன்கள் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் விட அதிகமாக அதிகரித்துவிடுமேயானால், அது அந்நாட்டின் பொருளாதாரம் திவாலாகிவிட்டதைக் குறிக்கிறது. ஆகவே அரசாங்கங்கள் ஒன்று கடன்களைக் குறைத்து வைக்க வேண்டும் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வைக்க வேண்டும்.
கடந்தகாலத்தில், செலாவணி மதிப்பை மறுமதிப்பீடு செய்தும், ஏற்றுமதிகளை உயர்த்தியும் அரசாங்கங்கள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க செய்தன. ஆனால் யூரோ ஆட்சியின்கீழ் அவ்வாறு செய்வது சாத்தியமல்ல.
1999இல் யூரோ அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி அதிகளவில் கடன்களைச் சார்ந்திருந்தது. அங்கே பொருளாதார அபிவிருத்தி சீரற்று இருந்தது; அதாவது விளிம்பிலிருந்த நாடுகளின் பட்ஜெட் பற்றாக்குறையில் ஓடிக் கொண்டிருந்தன; அதேவேளையில் ஜேர்மனி போன்ற மைய நாடுகளின் (core countries) பட்ஜெட் உபரியில் இருந்தது.
இந்த உபரிகள் (surplus) பின்னர் விளிம்பிலிருந்த நிதியியல் அமைப்புகளுக்குள் மறுசுழற்சி செய்யப்பட்டன; காரணம், அங்கே நடைபெற்ற செலவுகள் மைய நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளை அடித்தளமாக கொண்டிருந்தன. இதேபோன்று தான், 2001 மந்தநிலைமைக்குப் பின்னர், சீனாவின் ஏற்றுமதி உபரிகள் அமெரிக்க நிதியியல் அமைப்பிற்குள் மறுசுழற்சி செய்யப்பட்டு, அதனால் மலிவுக்கடனுடன் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி தூண்டிவிடப்பட்டது.
ஆனால் இதே நிகழ்முறையை இப்போதைய ஐரோப்பிய நெருக்கடிக்குப் பொருத்தி வைக்க முடியாது. ஏனெனில், இந்த நெருக்கடி ஒட்டுமொத்தமாக கடன்-வழங்கல் முறையையே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இதற்கான ஒரே தீர்வு, தொழிலாளர் வர்க்கத்திடம் மட்டுமே உள்ளது. அனைத்துலக தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதென்பது வரலாற்றுரீதியில் தவிர்க்கவியலாததாய் மாறிவருகிறது.
இந்திய-நேபாள உறவு
அக்டோபர் 20, The Hindu நாளிதழில், A vision for Nepal-India relations என்ற தலைப்பில் நேபாள பிரதம மந்திரி பாபுராம் பட்டாராய் எழுதிய தலையங்கம் வெளியாகி உள்ளது. பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், தம்முடைய இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று கூறி அக்கட்டுரையைத் தொடங்குகிறார்.
புவி-மூலோபாயரீதியில் நேபாளம் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்திய-சீன உறவுகளில் ஏற்கனவே நேபாளம் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.
அந்த கட்டுரையில் இந்தியாவுடனான நேபாளத்தின் உறவு எந்தளவிற்கு பிணைந்துள்ளது என்பதை விவரிக்கும் அவர், இந்தியாவுடனான முக்கிய இருதரப்பு பிரச்சினைகள் அரசியல் மற்றும் பாதுகாப்பு சார்ந்து இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.
வரலாற்றில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை இந்த நல்லிணக்க பயணம் தீர்க்க உதவுமென்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார். சாரத்தில், இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நேபாளம் தற்போதைய நிலைமையில் இந்தியாவின் பக்கம் சாய்ந்துநிற்க விரும்புவதை அந்த தலையங்கம் எடுத்துக்காட்டுகிறது.
வோல் ஸ்ட்ரீட் போராட்டங்கள் எதை காட்டுகின்றன?
வோல் ஸ்ட்ரீட்டை முற்றுகையிட்டு நடக்கும் போராட்டம் அதன் நான்காவது வாரத்தில் நுழைந்துள்ளது. அது அமெரிக்க அரசியலில் மேலும்மேலும் அழுத்தங்களை அதிகப்படுத்தி வருகிறது.
வியாழனன்று, ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் துணை ஜனாதிபதி ஜோ பிடென் இருவரும் போராட்டக்காரர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதத்தில் அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். அமெரிக்க நிதியியல் முறையின் செயல்பாடுகள் மீது பரந்தளவில் அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டிருக்கும் விரக்தியை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தி வருவதாக ஒபாமா தெரிவித்திருந்தார். ஆனால் உண்மையில் முதலாளித்துவ அமைப்புமுறை வரலாற்றுரீதியில் தோல்வியுற்றிருப்பதையே அவர்களின் குரல் எதிரொலிப்பதாக உள்ளது.
போராட்டக்காரர்களுக்கும், Tea Partyக்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருப்பதாக துணை ஜனாதிபதி ஜோ பிடென் வலியுறுத்தினார். Tea Party என்பது என்ன? எதனால் வோல் ஸ்ட்ரீட் போராட்டம் Tea Partyயோடு ஒப்பிடப்படுகிறது? என்பதெல்லாம் ஒருபுறம் இருப்பினும், Tea Partyஐ குடியரசு கட்சி பயன்படுத்திக் கொண்டதைப் போல, வோல் ஸ்ட்ரீட் போராட்டங்களை ஜனநாயக கட்சி பயன்படுத்த விரும்புவதாக இடதுசாரி செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்த போராட்டங்களைக் கொண்டு ஒபாமாவை மீண்டும் 2012 தேர்தலில் வெற்றிபெற செய்யும் வாய்ப்புகளை உருவாக்க ஜனநாயக கட்சியினர் முனைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வோல் ஸ்ட்ரீட் போராட்டங்களை ஆளும் வர்க்கம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முனைகிறது என்பதை திட்டவட்டமாக இன்றைய நிலைமைகளில் அனுமானிக்க முடியாதுள்ளது.
எது எவ்வாறிருந்த போதினும், வோல் ஸ்ட்ரீட் பிரச்சினை ஒரு தேசிய பிரச்சினையல்ல. அதை தேசிய எல்லைகளுக்குள் தீர்த்துவிடவும் முடியாது. சர்வதேச அளவில் வர்த்தகங்களும், பொருளாதாரங்களும் பின்னிபிணைந்திருக்கையில், ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதாலேயோ அல்லது வேறு ஏதேனும் மூலதனத்திற்காக பணத்தைப் பாய்ச்சும் திட்டங்கள் மூலமாகவோ அதை சரிக்கட்ட முடியாது என்பது நிதர்சனமான உண்மையாக விளங்குகிறது.
அமெரிக்கா அதன் பிரச்சினையைத் தீர்க்க விரைவிலேயே, வேறு வழியில்லாமல், வேறு நாடுகளைப் பலிகொடுக்க திரும்புமென்பது தெளிவாக உள்ளது. குறிப்பாக அமெரிக்கா-சீனா இடையிலும், அமெரிக்கா-ஐரோப்பாவிற்கு இடையிலும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஆசிய மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் பகடைக்காய்களாய் ஆக்கப்படுகின்றன.
முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வு அதிகரிப்பதென்பது, வரலாற்றுரீதியில், அதற்கு சம-பலத்தில், சோசலிச சிந்தனையை, அதுவும் சர்வதேச சோசலிச உணர்வை அதிகரிக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
அன்னா ஹசாரே போராட்டத்தின் முடிவென்ன?
அன்னா ஹசாரேவின் போராட்டம் எட்டாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் (தமிழக சினிமாதுறையினர் உட்பட) ஆதரவு அளித்து வருகின்றனர். நல்லது.
ஆனால் இந்த போராட்டத்தின் முடிவென்ன? சமரசமா? அல்லது லோக்பால் மசோதாவின் நிறைவேற்றமா?
எவ்வாறிருந்தபோதினும், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட பல தலைவர்கள் சமரச முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
தான் சாவதற்கும் தயார்; ஆனால் வளைந்து கொடுக்க போவதில்லை என்று ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் என்ன நடக்கிறது
ஜப்பானில் என்ன நடக்கிறது?
ஜப்பானின் ஆளும் கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை மாறும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. 2009 தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற ஜப்பான் ஜனநாயக கட்சி, அப்போது யுகியோ ஹடோயமாவை பிரதம மந்திரியாக்கியது.
ஆனால் நிலவும் சர்வதேச அரசியல் நிலைமைகளின்கீழ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவியலாமல் திணறிய ஹடோயமாவிற்கு வாஷிங்டன் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்தும் அழுத்தம் நீடித்தது. இதனால் 2010இல் ஆட்சியிலிருந்து விலகினார்.
இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் நான்டோ கன். இவர் முந்தையவரின் ஆட்சியில் வாஷிங்டன் உடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகளைச் சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டார். இருப்பினும், இவர் எடுத்த சில நடவடிக்கைகள் ஜப்பான்-சீன உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி கடந்த ஓர் ஆண்டிற்குள் ஜப்பான் ஜனநாயக கட்சிக்குள் உட்கட்சி பூசலும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச்சில் எதிர்கட்சியான தாராளவாத ஜனநாயக கட்சியால் (LDP) கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆளும் கட்சியின் சில பிரிவுகளே ஆதரவு தெரிவித்திருந்தன.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைமை, பூகம்ப சீரழிவு, வெளியுறவு கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு, உட்கட்சி பூசல், உள்நாட்டு வரிக்கொள்கைகளில் நிலவும் கருத்துவேறுபாடுகளால் உந்தப்பட்டு கன்னும் பதவிவிலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இன்றைய செய்திகள்_16082011
இந்தியாவில் ஒருபுறம் தற்காலிக பொருளாதார வளர்ச்சியின் காரணமாக ஒரு சலுகைபடைத்த தட்டு நாகரீகமான வாழ்க்கையைப் பெற முடிந்திருக்கின்ற போதினும், மறுபுறம் தங்களின் வாழ்வாதாரங்களுக்காக உடல் அங்கங்களை விற்கும் அவலங்களும் நீடிக்கிறது.
தங்களின் கடன் சுமைகளைத் தீர்க்க வறுமையில் வாடும் மக்கள், தங்களின் சிறுநீரகங்கள், இரத்தம், கண் போன்ற உறுப்புகளை விற்பனை செய்வது அதிகரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதை தொழிலாக எடுத்து செய்துவரும் தரகர்கள், முக்கியமாக 2004 சுனாமில் பாதிக்கப்பட்ட மக்களைக் குறிவைத்து இதை செய்வதாக rt.com இணைய இதழ் தெரிவிக்கிறது.
பெரும் போராட்டங்களால் சீனாவின் பிரதான பெட்ரோகெமிக்கல் ஆலை மூடப்பட்டது
ஞாயிறன்று ஆயிரக்கணக்கானவர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சீனாவின் டாலியன் நகரில் அமைந்துள்ள பிரதான புஜீயா பெட்ரோகெமிக்கல் ஆலை மூடப்பட்டது.
இந்த ஆலையிலிருந்து நச்சுப்பொருட்கள் கசியக்கூடும் என்ற அச்சத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஆலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அங்கே நிகழ்ந்த போராட்டத்தில் சுமார் 12,000 பேர் பங்குபற்றியிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய செய்திகள்_11082011
சிரியா மீதான தடைகளை அமெரிக்கா இறுக்குகிறது
சிரிய அரசாங்கத்தால் உள்நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறைக்கு இடையில், அமெரிக்கா அந்நாட்டின் மீதான தடையாணைகளை இறுக்கியுள்ளது.
சிரியாவிலுள்ள வர்த்தக வங்கி மற்றும் செல்போன் சேவை வழங்குனருக்கு அமெரிக்கா பல்வேறு தடையாணைகளை விதித்துள்ளது. இதற்கிடையில் முக்கிய நகரமான ஹமாவிலிருந்து இராணுவத்தைத் திருப்பி எடுத்துவிட்டதாக சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிரிய தலைநகர் டமாஸ்கஸிற்கு 165 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹம்ஸ் நகரில் புதனன்று நடந்த ஒடுக்குமுறையில் 18 மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க சுதந்திர தேவி சிலை புணரமைப்பு வேலைகளுக்காக மூடப்படுகிறது
அமெரிக்காவிலுள்ள பிரபல சுதந்திர தேவி சிலையின் புணரமைப்பு வேலைகளுக்காக அங்கே அடுத்த ஒரு வருடத்திற்கு பார்வையாளர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
305 அடி உயரமுள்ள இந்த சிலையின் தலைப்பகுதி மற்றும் அதன் தீபம் வரையில் மக்கள் சென்று பார்க்க வசதியுள்ளது. இதன் புணரமைப்பு வேலைக்கு 27.5 மில்லியன் டாலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
125 ஆண்டு பழமையான அந்த சிலையின் உள்பகுதியில் புதிய படிகளும், விசை இயந்திரங்களும் பொருத்தப்படும் என்று அமெரிக்க உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.